Share this

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் இரவின் நிழல் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

இரவின் நிழல் விமர்சனம்

Production – பயாஸ்கோப் யுஎஸ்ஏ, அகிரா புரொடக்ஷன்ஸ்
Director – பார்த்திபன்
Music – ஏஆர் ரகுமான்
Artists – பார்த்திபன், பிரிகிடா சகா
Iravin Nizhal Release date – 15 ஜுலை 2022
Iravin Nizhal Running Time – 1 மணி நேரம் 34 நிமிடம்

‘ஒத்த செருப்பு’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற இயக்குனர் பார்த்திபனின் முயற்சிக்கு முதல் பாராட்டுக்கள்.

உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அதாவது கேமரா ஆன் செய்யப்பட்ட பின் முழு படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக எடுத்து முடித்த பின்தான் கேமரா ஆப் ஆகும். இடையில் ஒருவர் தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் படமாக்க வேண்டும். அப்படி 22 முறை முயற்சிக்கப்பட்டு 23வது முறையாக எடுத்து முடிக்கப்பட்ட படம்.

உலக அளவில் முதல் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படத்தில் இதைச் செய்ததற்கு பார்த்திபனை கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக இப்படி ஒரு முயற்சியைச் செய்ய யோசித்தவர் கூடவே நல்லதொரு கதையையும் யோசித்திருந்தால் இன்னும் பெரிய சாதனையைப் படைத்திருக்கலாம்.

சிறு வயதில் பாலியல் ரீதியாக பிரச்சினையை அனுபவித்து, திருட்டு வேலை செய்து பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று, திரும்பி இளமைப் பருவம் எட்டியதும் காதலில் விழுகிறார் பார்த்திபன். காதலித்த பெண் துரோகம் செய்து வேறு ஒருவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார், அதற்கு அந்தப் பெண் சொல்லும் காரணம் பணம். பின் ஆந்திராவுக்குச் செல்பவர் அங்கு ஒரு பெண்ணைக் காதலித்து மணமுடிக்கிறார். ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, கடன் கொடுத்தவர்கள் பார்த்திபனின் கர்ப்பிணி மனைவியை நிர்வாணப்படுத்துகிறார்கள். அந்தக் கொடுமை தாளாமல் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு ஆசிரமத்தில் சேரும் பார்த்திபன் நகைகளைக் கொள்ளையடித்து பெரிய பைனான்சியராகிறார். கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பெண் குழந்தைக்கும் அப்பாவாகிறார். அதன் பின்னும் விதி அவரை வேறு ரூபத்தில் துரத்துகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மேலே சொன்ன கதையை திரைக்கதையாகப் படத்தில் கொடுக்கும் போது பிளாஷ் பேக்கில் அவ்வப்போது கொடுத்ததால் படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களுக்கு நிறைய குழப்பம் வரும். மேலும், பார்த்திபன் கதை சொல்லச் சொல்ல காட்சிகள், அடுத்தடுத்து நகர்கிறது. அதையும் பின் தொடர முடியாமல் ரசிகர்கள் தவிக்கும் நிலை இருக்கிறது. இந்த சிற்சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த ‘ஒரே ஷாட்’ பட முயற்சி, முத்தான ஒரு முயற்சி.

ஒவ்வொரு படத்திலும் பெண்களைப் போற்றுவதும், தூற்றுவதுமாகவே பார்த்திபனின் படம் வந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்போது விடுபட்டு வேறு விதமான கதையை யோசிக்கப் போகிறார் என்றும் கேட்க வைக்கிறது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பார்த்திபனின் நடிப்பு பேசப்படும் விதத்தில் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. அவரது சிறு வயது, இளமைக் கால வயது கதாபாத்திரங்களில் வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபனின் இளமைப் பருவக் காதலியாக சினேகா குமார், ஆந்திர மனைவியாக பிரிகிடா சகா, இரண்டாவது மனைவியாக சாய் பிரியங்கா ரூத் ஆகிய மூவருமே யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். இருப்பினும் மூவரில் பிரிகிடா நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். போலி சாமியாராக ரோபோ சங்கர். அவரது பெண் சீடராக ஓரிரு காட்சிகளில் வரலட்சுமி சரத்குமார்.

படத்தில் நடித்துள்ள அனைவருமே ‘ஒரே ஷாட்’ படமென்பதால் அந்த டைமிங்கில் கரெக்டாக நடிக்க வேண்டும். அப்படி புரிந்து, சரியாக நடித்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஏஆர் ரகுமானின் பின்னணி இசை இந்தப் படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அந்த சித்தர் பாடல் கேட்கக் கேட்ட என்னவோ செய்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு, படம் முடியும் வரை கிம்பல் மூலம் கேமராவை ஆபரேட் செய்த ஆகாஷ் ஆகியோரது உழைப்பு பெரும் உழைப்பு. 50க்கும் மேற்பட்ட அரங்குகளை அடுத்தடுத்து விதவிதமாக அமைத்த கலை இயக்குனர் விஜய் முருகன், தொடர் படப்பிடிப்பில் நடனத்தை அமைத்த சாந்தி குமார், பாஸ்கர் குமார் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்.

கதையில் மட்டும் கொஞ்சம் மாற்றம் இருந்திருந்தால் ‘இரவின் நிழல்’ இன்னும் இனிய நிழலாக அமைந்திருக்கும்.


Added by

Richard Rogers

SHARE

Your email address will not be published. Required fields are marked *